சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காலனி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன் (57). இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் முருகேசனுக்கும், மனைவி ரத்தினத்திற்கும் இடையே வீட்டிற்கு பொருள்கள் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகேசன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பிறகு, அவர் இரவு அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், பட்டம்மாள் தெருவிலுள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட ரோந்து பணியிலிருந்த காவல் துறையினர், உடனடியாக மின் வாரியத்தை தொடர்புகொண்டு மின் இணைப்பை நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின்கம்பத்தில் ஏணி மூலமாக ஏறி முருகேசனிடம் சுமூகமாக பேசி கீழே இறக்கினர்.
இதன் பிறகு, காவல் துறையினர், முருகேசனிடம் தற்கொலை முயற்சி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவருக்கு அறிவுரை கூறிய காவல் துறையினர், அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவரது மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், அவர்களுக்குத் தேவையான பொருள்களையும் காவல் துறையினர் வாங்கி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.