சென்னை காசிமேடு சிங்கார வேலர் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (23). இவர் பாரிமுனையில் உள்ள கந்தகோட்டத்தில் தனியார் மருந்தகத்தில், மருத்துவ உபகரணங்கள் விற்கும் பணி செய்துவருகின்றார்.
இந்த நிலையில், நேற்றிரவு (ஜூலை 7) பணி முடிந்த திவ்யா, வீட்டிற்குச் செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்து ஷேர் ஆட்டோவில் ஏறினார். அப்போது திவ்யா முகக்கவசம் அணியாமல் இருந்ததால், ஆட்டோவில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர், தன்னிடமிருந்த முகக்கவசம் ஒன்றை வழங்கி, அணிந்துகொள்ளுமாறு திவ்யாவிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து திவ்யாவும் அந்த முகக்கவசத்தை அணிய மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். பின்னர் சற்று மயக்கம் தெளிந்தவுடன் திவ்யா ஆட்டோவிலிருந்து இறங்கி, காரணீஸ்வரர் பகோடா பகுதியில் இருக்கும் தனது ஆண் நண்பரைத் தொடர்புகொண்டார். பின் அவரது உதவியுடன் திவ்யா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக திவ்யா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆட்டோவில் இருந்த அந்தப் பெண் யார், மயக்க மருந்து கொடுத்து நகைகளைத் திருட முயன்றனரா என்பன குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியும்போது செய்யவேண்டியவை; செய்யக்கூடாதவை