சென்னை: சின்னமலை பகுதியில் தனியார் தங்கும் விடுதிகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சின்னமலை என்.ஜி.ஆர் காலனியில் உள்ள சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ‘Hotel Senthur’ என்ற பெயரில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முகப்புப் பகுதியில் 1000 ரூபாய்க்கு அறை வாடகைக்கு விடப்படும் எனவும், எந்த பெண்ணுடன் வேண்டுமானாலும் உல்லாசமாக இருக்கலாம் என்ற சர்ச்சைக்குரிய வாசகத்துடன் LED பலகை மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் அந்த LED விளம்பர பலகை மூலம் செய்யப்பட்ட விளம்பரத்தை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, சென்னை காவல் துறை, முதலமைச்சர் ஆகியோரை குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னையில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களில் ஒருவர் பதிவிட்ட இந்த பதிவு ட்விட்டரில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பதிவின் கீழ் பலர் கருத்து பதிவிட்டும், அந்த பதிவை பகிர்ந்தும் வருகின்றனர். தனியார் தங்கும் விடுதியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வைரலாகி வரும் நிலையில், உடனடியாக சம்மந்தப்பட்ட நிர்வாகம் LED பலகையை அகற்றினர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல் துறையினர் சம்மந்தப்பட்ட விடுதிக்குச் சென்று விடுதியின் மேனேஜர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஊழியர்கள் யாரோ திட்டமிட்டு பழிவாங்குவதற்காக LED பலகையில் எழுதி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் சம்மந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியிடம் விளக்கம் கேட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கனெக்ட்' படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடத் தடை!