சென்னை: நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், "கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு நாம் தமிழர் கட்சியின் அப்போதையே தலைவராக இருந்த தடா சந்திரசேகர் மூலமாக சீமான் தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்தி தன்னை திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்கிறேன் என்றும் கயல்விழியைத் துணைவியாக வைத்துக் கொள்கிறேன் என்றும் கூறியதாகவும் அதை நம்பி அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என காவல் நிலையத்தில் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதுமட்டும் அல்லாது, சீமான் அவ்வாறு நடந்து கொள்ளாமல் தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும் மேலும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது பதியப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்" என நடிகை விஜயலட்சுமி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த வழக்கு குறித்து காவல் ஆணையர் விசாரணை செய்ய உத்தரவிட்டதன் பெயரில் கோயம்பேடு துணை ஆணையர் கடந்த இரண்டு நாட்களாக விஜயலட்சுமி கொடுத்த புகார் கோப்புகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இந்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 31) விஜயலட்சுமியை சென்னை ராமாபுரம் காவல் நிலையத்திற்கு நேரடியாக வரவழைத்து சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்தனர்.
ஏற்கனவே பதியப்பட்ட இந்த வழக்கின் ஆவணங்களையும், சீமானுடன் விஜயலட்சுமி தொடர்பில் இருந்தது குறித்த ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டு தொடர்ந்து மீண்டும் விசாரணையானது நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ராமாபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினரை வெளியில் அனுப்பி வைத்துவிட்டு விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் உமையாள் தனியாக விசாரணை நடத்தினார்.
இதனால், காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார்கள் காவல் நிலையம் வெளியில் ஒரு மணி நேரம் காத்திருக்கின்றனர். மேலும், காவல் நிலையத்தில் வழக்கமான பணிகள் பாதிப்படைந்து, புகார் அளிக்க வரும் புகார் தாரரிடம் வரவேற்பு வாயிலில் புகார்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜவான் திரைப்பட விழாவிற்குச் சென்று திரும்பியபோது சோகம்.. மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!