தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவானது கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 75 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக கூட்டணி 150-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்சி அமைத்திட திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால், வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடைவிதித்திருந்ததால், பட்டாசு வெடிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பொறுப்பற்ற முறையில் செயல்படும் காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
திமுகவினர் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருவதால் அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் ஒன்றுகூடி பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, விதிமுறைகளை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட தொண்டர்களை அனுமதித்ததாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தேனாம்பேட்டை ஆய்வாளர் முரளியை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தொற்றுநோய் பரவுதல், சட்டவிரோத கூடுதல், உத்தரவை மீறுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் ஒன்று கூடும்போது தடுத்ததாகவும், இதனை மீறி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தியதாகக் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.