சென்னை: சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர், மூர் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். இவர் போலீஸ் இன்ஃபார்மராக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மூர் மார்க்கெட்டில் நான்கு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து, செல்போன் கடைகள் வைத்து வியாபாரம் செய்துள்ளனர். இவர்கள் பிற செல்போன் கடைகளில் இருந்து செல்போன்களைத் திருடிக் கொண்டுவந்து விற்பனை செய்ததாகவும், மார்க்கெட் பகுதிகளில் கஞ்சா பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முனுசாமி போலீசாருக்குத் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் முனுசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்றிரவு(டிச.3) முனுசாமியின் வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து முனுசாமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற பெரியமேடு போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நான்கு இளைஞர்களையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க:இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற கொடூரம்.. திருச்சியில் நடந்தது என்ன?