சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்த போது, அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் வந்துள்ளார்.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உள்ளனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜெயக்குமாரின் ஆதரவாளரான பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து (59) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த மாரிமுத்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் மாரிமுத்துவை தாக்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் மீது ஆபாசமாக திட்டுதல், முறையற்று தடுத்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒற்றை தலைமை விவகாரம்; கே.பி முனுசாமி புதிய பொருளாளர் ? - ஈபிஎஸ் ஆலோசனை