சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பத்மாவதி, செம்பியத்தைச் சேர்ந்த சஹீரா ஆகிய இருவரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை அணுகியுள்ளனர்.
அப்போது, அவர்கள் போலி பணி நியமன ஆணை வைத்திருந்ததை அலுவலர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், உடனடியாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் ஒன்றை அளித்தார்.
இப்புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவிலுள்ள மரபு சாரா குற்றப்பிரிவு அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், புளியந்தோப்பைச் சேர்ந்த நாகேந்திரராவ், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள தொழில் துறையில் உதவியாளராக பணிபுரியும் ஞானசேகர், நாகேந்திரராவிடம் கூட்டு சேர்ந்து, குரூப் 2 பணிக்கான போலி பணி நியமன ஆணையை தயாரித்தது தெரியவந்தது.
செல்போன் எண்ணால் சிக்கிய குற்றவாளிகள்:
மேலும், பாதிக்கப்பட்ட பத்மாவதியின் கணவர் ரமணனுக்கு, அரசு ஊழியரான ஞானசேகரன் பழக்கமாகியுள்ளார். இதையடுத்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி அவரிடமிருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்துள்ளார்.
அவர் கொடுத்த போலி பணி நியமன ஆணையை வைத்து பணிக்குச் சேர முயன்றபோதுதான் பத்மாவதி ஏமாற்றப்பட்டதை அறிந்தார். ஞானசேகரனின் செல்போன் எண்ணை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆய்வு செய்தபோது சினிமாவின் நடனமாடும் சுமித்ரா என்ற பெண்ணோடு அடிக்கடி பேசிவந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சினிமாவில் நடனமாடும் சுமித்ராவை வைத்தே ஞானசேகரணை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோன்று புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தார் நாகேந்திரராவ். இவர், திடீரென புரசைவாக்கத்தில் வீடு மாறியதாக காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது செல்போன் எண்ணை வைத்து, குரூப் 2 பணியில் வேலைக்குச் சேர விருப்பமுள்ளவர்கள் போல் இருவரை நாகேந்திரராவுக்கு தொடர்புகொள்ள வைத்தனர். அதனை நம்பி புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் வரவைத்து நாகேந்திர ராவை காவல் துறையினர் கைது செய்தனர்.
ரூ.2 கோடி வரை மோசடி:
இதேபோல், செம்பியத்தைச் சேர்ந்த சஹீராவிடமும் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோன்று ராமநாதபுரத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை 50 பேரிடம் இது போன்று போலி பணி நியமன ஆணை மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் பணி நியமன ஆணைக்காக அதிகபட்சமாக 6 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர்.
இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்துள்ளதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இவர்களுக்கு அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து கண்டறிய, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர்களுடன் எடுத்த ஃபோட்டோவை காட்டி ரூ.25 லட்சம் மோசடி!