சென்னை: அண்ணா சாலை தேனாம்பேட்டையில் தொடங்கி ஜெமினி மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர் வீலிங் செய்தபடியே அபாயகரமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்கள் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .
அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் மூலம் இருசக்கர வாகன எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வீலிங்கில் ஈடுபட்டவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ் (19) மற்றும் முகமது சைபான்(19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பைக் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பிரபலமான ஹைதராபாத்தை சேர்ந்த பினோஜ் என்பவர் சென்னை அண்ணா சாலை வழியாக வருவதை அறிந்து அவரைப் பார்க்க சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் பினோஜ் அண்ணா சாலையில் பைக் சாகசங்களில் ஈடுபடும்போது அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும், அவருடன் இணைந்து தாங்களும் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பைக் சாகசங்களின் ஈடுபட்ட பினோஜை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகவும், தனிப்படை காவல்துறையினர் ஹைதராபாத் விரைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஃபிரோஸ் மாலிக் (19), பெரம்பூரை சேர்ந்த இம்ரான் அலி கான் (20), முகேஷ் (20) ஆகிய மூவரை பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.