சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியில் வசித்து வருபவர் அகஸ்டி வின்ஃப்ரெட்(58). இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி (45) என்பவர் வீட்டுவேலை செய்து வந்தார். இவர் வீட்டு வேலைக்கு வரும் போதெல்லாம், அவருடைய 19 வயது மகளான சுமித்ரா என்பவரையும் அழைத்து வருவது வழக்கம்.
அப்போது சுமித்ரா வீட்டின் உரிமையாளர் அகஸ்டி வின்ஃப்ரெட் உடைய செல்போனை கேம் விளையாடுவதாக கூறி வாங்கி பயன்படுத்திவந்துள்ளார். அப்போது அகஸ்டின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை அவ்வப்போது தனது காதலனுக்கு பரிமாற்றம் செய்துவந்துள்ளார். அப்படி மொத்தமாக 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி, அதன் மூலம் தனது காதலனுக்கு பைக், செல்போன் உள்ளிட்டவை வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போவதை கண்டுபிடித்த அகஸ்டி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த காவல்துறை விசாரிக்கையில், சுமித்ரா தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவலர்கள் வள்ளியின் வீட்டிற்கு சென்றபோது, சுமித்ரா அங்கு இல்லை. தலை மறைவாகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து சுமித்ராவை தேடிவந்தனர். இந்த நிலையில் சுமித்ரா தனது ஆண் நண்பர் சதீஷ் குமார்(32) என்பவருடன் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: மிரட்டல் இளைஞர் கைது