கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆனால், பொதுமக்கள் தேவையின்றி, அரசின் உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிகின்றனர். அவ்வாறு, உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்ததாக கூறி கடந்த 30 நாள்களில் மட்டும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேரை காவல் துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். வாகனங்களில் சுற்றியதாகக் கூறி 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2 லட்சத்து 39ஆயிரத்து 770 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னரே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், வாகனத்தைப் பறிகொடுத்த பொதுமக்கள் தினந்தோறும் காவல் நிலையத்தை அணுகி அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி வாகனத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற காவல் துறையினர் பறிமுதல் செய்த வாகனங்களை உரியவர்களிடம் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 நாள்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட 65ஆயிரத்து 703 இருசக்கர வாகனங்கள், 515 மூன்று சக்கர வாகனங்கள், 2 ஆயிரத்து 38 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 68 ஆயிரத்து 256 வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாகன ஒப்படைப்பு விவகாரம்: கூட்டமாக வந்த உரிமையாளர்கள்