சென்னை நுங்கம்பாக்கம் உதவி காவல் ஆணையரிடம், பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த ஜெயம்கொண்டான் என்பவர், பார்த்திபன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சினிமாவில் பாட்டு எழுத வேண்டும் என்று நான் 1999ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து ஹோட்டலில் வேலை பார்த்து நந்தனம் கலை கல்லூரியில் பி.ஏ. படித்தேன். கே.கே.நகரில் கவிஞர் கிச்சன் என்ற ஹோட்டலை நடத்தி வந்தேன்.
என் அலுவலகத்துக்கு பக்கத்தில் இயக்குநர் பார்த்திபன் அலுவலகம் இருக்கிறது. சினிமாவில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரிடம் வேலைக்கு சேர்ந்து அவர் வீட்டுக்கு, அலுவகத்துக்கு என்று வேலை பார்த்து வந்தேன்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் இல்லத்தில் திருட்டுச் சம்பவம் ஏற்பட்ட விவகாரத்தில் என்னையும் மற்ற எல்லா பணியாளர்களிடத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில் என் மீது எந்த சந்தேகம் இல்லை என்று விடுவித்தனர்.
அதன் பின்னரும் இயக்குநர் பார்த்திபன் என்னை வேலைக்கு வைத்துக்கொண்டார். இதற்குப் பின் அவர் தற்போது எடுத்துவரும் ‘ஒத்த ஜோடி செருப்பு’ படத்தில் அவருக்கு செருப்பாக இருந்து வேலைகளை செய்து வந்தேன்.
அவரிடம் பணியாற்றிய பழைய ஆட்களை தொடர்புகொண்டு நான் பேசியதாக, பார்த்திபனும் அவருடைய உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியும் மூன்றாவது மாடியிலிருந்து என்னை அடித்து உதைத்து தள்ளி விட்டனர். நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். பழைய வேலையாட்களை தொடர்பு கொண்டு பேசியதால் எனக்கும் கடந்த வருடம் நடந்த திருட்டுக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறி என்னை அடித்துவிட்டு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
காசு, பணத்துக்காக நான் இவரிடம் வேலை பார்க்கவில்லை. என்னிடமும் கதை உள்ளது. நான் என்றேனும் ஒருநாள் சாதிப்பேன். என் தமிழ் என்னை காப்பாற்றும். புலியின் வாலை பிடித்துள்ளோம். அது விட்டால் கடிக்கும் என்பதால் அவருடனே இருந்தேன்.
இயக்குநர் பார்த்திபன் பசு தோல் போர்த்திய புலி என்பதை நிரூபித்துவிட்டார். அவர்மீது நுங்கம்பாக்கம் உதவி காவல் ஆணைரிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் எனக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.