கடலூர் மாவட்டம் பழைய வண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (26). இவர் 2013ஆம் ஆண்டு காவலராகத் தேர்வாகி சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் இவர் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
தனியார் விடுதியில் தங்கிய சுரேஷ்
சுரேஷ் கடந்த 19ஆம் தேதி முதல் பெரியமேடு காவல் நிலையம் அருகேயுள்ள முத்து தெருவில் உள்ள தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். இது தொடர்பாக சக காவலர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, சில சொந்த காரணங்களுக்காக தங்கியிருப்பதாக காரணம் தெரிவித்ததாகவும், நேற்று இரவு உணவு உண்ணக்கூட வெளியில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
சடலமான சுரேஷும், கடிதமும்
நீண்ட நேரமாகியும் சுரேஷ் வெளியில் வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் மாற்றுச் சாவியை பயன்படுத்தி அறையினுள்ளே சென்று பார்த்தபோது, விஷம் அருந்திய நிலையில் சுரேஷ் இறந்து கிடந்துள்ளார். அவர் அருகில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், இது தனது சொந்த முடிவு, தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியமேடு காவல் துறையினர் காவலர் சுரேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
காவல் துறை விசாரணை
காவலர் சுரேஷின் தற்கொலைக்கு காதல் பிரச்சினை, பணிச்சுமை, உயர் அலுவலர்கள் ஏதேனும் கொடுத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். காவலர் சுரேஷின் தற்கொலை சக காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உயிர் பறிக்கும் கடன் செயலிகள்!