ஆவடி அடுத்த பங்காருபேட்டை, கள்ளிகுப்பம், பெருமாள் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரான்சிஸ் (24), விக்னேஷ்(23), ராஜதுரை (24), ரமேஷ் (23) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் பூச்சி அத்திப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை இரவு பணி முடிந்து விட்டு 4 பேரும் வீடு திரும்பினர். பின்னர், அவர்கள் வீட்டு கதவை பூட்டாமல் அனைவரும் தூங்கியுள்ளனர். அப்போது, அங்கு ஒரு மர்ம நபர் புகுந்து அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை திருடி சென்றுள்ளார்.
மதியம் எழுந்த 4 பேரும் செல்போன்கள் திருடு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அவர்கள் ஆவடி டேங்க் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, ஊத்துக்கோட்டை, பனையஞ்சேரி கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (29) என்பவர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த பிரகாசை காவல்துறையினர் இன்று மாலை பிடித்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு, காவல்துறையினர் அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.