சென்னை: அம்பத்தூரில், கஞ்சா விற்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய
ஆறு பேர் கொண்ட கும்பலை அம்பத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருநங்கையைத் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு சட்டம் பயின்று வருபவர் யஷ்வந்த்ராயன் (22). இவர் திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பதவி வகித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கும் ஓட்டேரியைச் சேர்ந்த சரண் (25) என்பவருக்கும் கஞ்சா விற்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், யஷ்வந்த்ராயனை அம்பத்தூரில் உள்ள புதூர் பகுதிக்கு வருமாறு சரண் அழைத்துள்ளார். அதன்படி, அங்கு வந்த யஷ்வந்த்ராயனை, சரண் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த யஸ்வந்த்ராயனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், யஷ்வந்த்ராயன் மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், யஷ்வந்த்ராயனை வெட்டிய சரண் (25), கோட்டீஸ்வரன் (28), ஜமால் (22), முருகவேல் (24), ஜீவா (25), சஞ்சை (20) ஆகிய 6 பேர் அம்பத்தூரில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்ற போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்ற நிலையில், மூன்று பேர் பிடிபட்டனர். மீதமுள்ள மூன்று பேர் தப்பியோட முயன்ற போது வழுக்கி விழுந்ததில் அவர்கள் மூவருக்கும் கை எலும்பு உடைந்து விட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், திருநங்கை ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து, இளைஞரை அரிவாளால் வெட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை அம்பத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருநங்கையைத் தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாள் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கு மூளையாக இருந்த பெண்! கொள்ளையனை நெருங்கிய போலீஸ்..முழுப்பின்னணி என்ன?