சென்னை: போலிச் சான்றிதழ் தயார் செய்த ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்களை கைது செய்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் போலி சான்றிதழ் விவகாரத்தில், அமெரிக்க தூதரக போலி விசா தயாரிக்கப்பட்டது தெரியவந்து இருப்பதாக அவர் கூறினார்.
இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "போலிச் சான்றிதழ் குறித்து அமெரிக்கா தூதரகம் புகார் அளித்தது. இந்த ஆண்டு அமெரிக்கா தூதரகத்தால் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ருஷிகேஷ் மற்றும் திவாகர் ரெட்டி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சென்னையில் வில்லிவாக்கத்தில் IIISTR ( INDIAN INSTITUTE OF INTEGRATED SCIENCE & TECHNOLOGY AND RESEARCH) என்ற நிறுவனம் நடத்தி வரும் முஹம்மது ரியாஸ் மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் மூலமாக போலிச் சான்றிதழ் பெற்று கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் முஹம்மது ரியாஸ் மற்றும் மகேஷ்வரன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், போலி ஆவணங்கள் தயார் செய்ய பயன்படுத்திய 4 சிபியு, 2 மாணிட்டர், 2 லேப்டாப், 2 டேப், 8 மொபைல் ஃபோன், எப்ஷான் கலர் ப்ரிண்ட்டர் மற்றும் நிரப்பிய, நிரப்பப்படாத கலிங்கா பல்கலைக்கழகம், ஷைன் பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 500க்கும் மேற்பட்ட போலி கல்விச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த உள்ளோம். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் இந்த ஆண்டில் சைபர் குற்றங்களில் 33 வழக்குகளில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 33 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். முன்னதாக, போலி ஆவணங்களை பார்வையிட்ட காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், போலி ஆவணங்களை தயாரித்த கும்பலை பிடித்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
இதையும் படிங்க: புதியதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 5ஆண்டுகள் கட்டாயப் பணி: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிக்கை!