சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் தனியாா் பயணிகள் விமானம் 79 பயணிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட தயாரானது.
அப்போது விமான நிலையத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை காவல்துறையினர், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள் மும்பைக்கு விமானத்தில் தப்பி செல்ல இருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து அவர்களின் விமானப் பயணத்தை ரத்து செய்து, அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விமானநிலைய மேலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அதோடு குற்றவாளிகளின் வழக்கு ஆவணங்கள், அவர்களை கைது செய்வதற்கான உத்தரவுகள் ஆகியவற்றையும் தனிப்படை காவல்துறையினர் விமான நிலைய அலுவலர்களிடம் காட்டினர். அவர்கள் லக்ஷ்மன்(30), அயூப்கான்(33), அமீர் முகமது(35) என்ற பெயா் பட்டியலையும் கொடுத்தனர்.
விமானநிலைய மேலாளர் அந்தப் பெயா்களை வைத்து ஆய்வுசெய்தபோது, அவர்கள் மூன்று பேரும் போர்டிங் பாஸ் வாங்கிகொண்டு, பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேலாளர் அவசரமா விமான நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து விமானம் புறப்படுவதை நிறுத்த செய்தார். இதைத்தொடர்ந்து உள்ளே சென்ற காவல்துறையினர், தப்பிச்செல்ல முயன்ற மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து விமானம் புறப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் தங்க நகைகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறையால் முடக்கி வைக்கப்பட்டு மூடிக்கிடக்கிறது. அந்த தொழிற்சாலைக்குள் இவர்கள் நுழைந்து மணல் குவியலுக்குள் புதைந்திருந்த தங்கத்துகள்களை திருடியது, அதோடு தொழிற்சாலையில் உள்ள முக்கிய ஆவணங்களை திருடியது ஆகிய வழக்கில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:போர்க்களமாக மாறிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!