சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை தடுப்பதற்காக "ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0" என்ற பெயரில் தீவிர சோதனை மேற்கொண்டு, போதைப் பொருட்களை கைப்பற்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயபுரம் அண்ணா பார்க் அருகே போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக ராயபுரம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு கார் ஒன்றில் போதைப்பொருள் கைமாறுவது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை கைமாற்றிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காசிம்(40), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல்(38) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 500 கிராம் மெத்தம்பெட்டமைன், 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட காசிம் டெல்லியிலிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை டெல்லியிலிருந்து ரயில் மூலமாக கொண்டு வந்து, குமரவேல் என்பவரிடம் விற்பனை செய்ய முயன்றதாகத் தெரியவந்தது. கைதான குமரவேல் ஏஜெண்டாக செயல்பட்டதாகவும், நாகை சுயேட்சை ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ் ஆகியோர் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், அதற்கான ஏஜெண்டாக குமரவேலை நியமித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குமரவேல் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ் இருவரையும் ராயபுரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர்கள் மெத்தம்பெட்டமைனை டெல்லியில் ஆர்டர் செய்து சென்னைக்கு வரவழைத்து, குமரவேலை அனுப்பி வாங்கி, வருவதை வழக்கமாக கொண்டிருப்பதும், பிறகு அந்த போதைப்பொருளை சட்டவிரோதமாக படகு வழியாக, இலங்கைக்கு கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 1 கிலோ மெத்தம்பெட்டமைனை இரண்டு மடங்கு விலைக்கு இலங்கையில் விற்பனை செய்வதும், கடந்த 20 வருடங்களாக மகாலிங்கம் இதேபோல போதைப்பொருள் விற்பனை செய்து வருவதும், ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மகாலிங்கம் பல முறை சிறைக்குச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மகாலிங்கம் வீட்டிலிருந்து 500 கிராம் மெத்தம்பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்து மொத்தம் 1 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நால்வரையும் சிறையில் அடைத்த போலீசார், மகாலிங்கத்திற்கு இலங்கை நாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் நகை திருட்டு: இருவர் கைது!