சென்னை: தேனாம்பேட்டை பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு (பிப்ரவரி 10) ஒருவர் அறை எடுத்துத் தங்கி, மது அருந்தியுள்ளார். அதிகாலை வரை மது அருந்திய நிலையில் விடுதிக்குப் பணம் தராமல் திடீரென அரை நிர்வாண கோலத்தில் விடுதியைவிட்டு கிளம்பியுள்ளார்.
இதனைக் கண்ட விடுதி ஊழியர், உடனடியாக அந்நபரை நிறுத்தி பணம் கேட்டதற்கு, பிறகு தருவதாகக் கூறி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், போதையில் வரவேற்பு அறையில் இருந்த கணினி உள்ளிட்ட பொருள்களை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
மேலும், தடுப்புகளை வீசி காரை உடைத்து தப்பிச் சென்றார். பின்னர் இது குறித்து விடுதியின் பாதுகாப்பு மேலாளர் அருண் குமார், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
அதில் பதிவான காட்சிகளை வைத்து அராஜகத்தில் ஈடுபட்டவரை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் செஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ்டின் என்பதும், இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துவருவதும் தெரியவந்தது.
மேலும், விசாரணையில் ஏற்கனவே ஆஸ்டின் செஞ்சி மாவட்டத்தில் திமுக வேட்பாளரை அடித்த வழக்கிலும், காவல் நிலையத்தில் காவல் துறையினரைத் தாக்கிய வழக்கிலும் தலைமறைவாக இருந்துவருவதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்கறிஞர் ஆஸ்டினை காவல் துறையினர், தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: காவலிலிருந்த தென்கொரிய மோசடியாளர்கள் தப்பியோட்டம்: சிபிஐ விசாரணை