டிச. 8ஆம் தேதி இரவு, சென்னை பூக்கடை குடோன் தெருவில் தல்லாராம் என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையில் ரூபாய் 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், குற்றவாளி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்கு துப்பு கிடைத்துள்ளது. பின்னர் ராஜஸ்தான் சென்று தனிப்படை போலீஸ் நடத்திய விசாரணையில், ஜோத்பூரைச் சேர்ந்த சாம் குஜார் (24), மகேஷ் சவுத்ரி (21), தயாள் பாகர் (24) ஆகிய மூன்று பேருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
மேலும், மகேஷ் சவுத்ரியை அகமதாபாத்திலும், தயாள் பாகர் புனேவிலும் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல் துறையினர் விரைந்து சென்று கைது செய்தனர். இருப்பினும் சாம் குஜார் இருப்பிடத்தைக் காவல் துறை தேடி வந்த நிலையில், கோவாவில் பதுங்கிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பின், கோவாவில் அவரை சுற்றி வளைத்த காவல் துறையினர், அவரிடமிருந்து ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. சாம் குஜார், ராஜாஸ்தான் மாநிலத்தில் மிகவும் பிரபலமான கொலை குற்றவாளி நாதுராமிடம் பயிற்சி பெற்றவர் என்பதும், பல்வேறு வழக்குகளில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. அதன்பின், மூன்று பேரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ராஜஸ்தான் விரைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிதான் நாதுராம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் குடியரசுத் தலைவர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி மோசடி' - இளைஞர் கைது!