சென்னை சூளைமேடு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவரது 3 வயது ஆண் குழந்தை மோனிஷ் நேற்று மாலை வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பறந்து வந்த மாஞ்சா காத்தாடி ஒன்று சிறுவனின் கண், மூக்கு பகுதிகளை அறுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மாடியிலேயே திடீரென கீழே விழுந்துள்ளார். உடனடியாக சிறுவனுக்குப் பிரியங்கா முதலுதவி செய்தார்.
இதுதொடர்பாக பிரியங்கா சூளைமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். நான்கே மணி நேரத்தில் மாஞ்சா நூலில் காத்தாடி விற்றதாக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், காத்தாடி விற்பனை செய்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், அயனாவரத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், டிரம்ஸ் வாசிக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாகவும், தற்போது ஊரடங்கால் வேலை இல்லாததால் பட்டம், மாஞ்சா நூல் விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி ஆன்லைன் மூலம் ஹைதராபாத்திலிருந்து பட்டம், மாஞ்சா நூல் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
பின்னர், அயனாவரத்தை சேர்ந்த நண்பர் விக்னேஷ் மூலம் மூலப்பொருட்களை வைத்து மாஞ்சா நூல், பட்டத்தை தயாரித்து வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. பலர் இவர்களிடம் மாஞ்சா நூல் பட்டத்தை வாங்கியுள்ளனர். இது மட்டுமின்றி மாஞ்சா காத்தாடியைப் பறக்கவிடும் ரகசிய போட்டிகளையும் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
பிரபாகரனுடைய வீட்டிலிருந்து, சுமார் 250 காத்தாடிகளும், மாஞ்சா தடவிய நூல்கண்டுகளும், லொட்டாய், 2 மின் மோட்டார்கள் உள்ளிட்டவைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும், காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.