சென்னை: பாடகர் கிருஷ்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சின்னத்திரை நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் பிரபல சினிமா பின்னணி பாடகர் பி.ஆர். கிருஷ்ணா. இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.
நடிகர் விஜய் நடித்த ''வேட்டைக்காரன்'' படத்தில் உள்ள பிரபலமான பாடலான ''என் உச்சி மண்டையில'' என்ற பாடலின் மூலம் பிரபலமானவர். இது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இவர் நேற்று தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு இரவு நேரத்தில் நடைபெற்ற சினிமா பாடகர் இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அதே இசை நிகழ்ச்சிக்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாத்தும் வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வர் பாடகர் கிருஷ்ணாவை பார்த்ததும் கோபமடைந்து அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டல் விடுத்துள்ளதாகவும்; மேலும் தன்னை கொல்வதற்காக 10 பேரை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கிருந்த சில நபர்களை காண்பித்து, அவர்கள் உன்னை கொல்லாமல் விடமாட்டார்கள் எனவும்; உன் நாட்களை எண்ணிக்கொள் என்றும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
நடிகர் ஈஸ்வர் ரகுநாத்துக்கும் தனக்கும் எந்த முன் பகையோ, முன்விரோதமோ ஏதும் இல்லை எனவும், அவரிடம் பேசியே பல ஆண்டுகள் ஆகின்றன, தான் கூறியது அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
தன் தாயாருடன் தனியாக வசித்து வரும் நிலையில் தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சின்னத்திரை நடிகர் ஈஸ்வரிடம் கேட்டபோது, இது குடும்பப் பிரச்னை எனவும் காவல் துறை உரிய விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலங்களுக்கு இடையேயான இந்த மோதல் பொது மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: பேருந்தில் மோதி உயிரிழந்த தாய்: ரூ.10,000 நிதி உதவி வழங்கி தூய்மைப்பணியாளர்கள் அஞ்சலி!