சென்னை கொரட்டூர் ஏரி 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவைக் கொண்டதாகும். கடந்த காலங்களில், இந்த ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கியது.
இந்நிலையில், இந்த ஏரிக்கு அருகில் உள்ள ஆவின் பால் பண்ணை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் ஏரியில் விடப்பட்டதால் அதன் நீர் மாசடைந்தது, இதனால், ஏரியின் தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் போனது.
மேலும், நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. கழிவுநீர் கலக்கப்பட்டதால் இந்த ஏரியில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விஷ மீன் இனமான சக்கர் மவுத் நிரம்பி காணப்பட்டது.
ஏரியில் வசிக்கும் விஷ மீன்களால், நாட்டு வகை மீன்களின் இனப்பெருக்கம் மிகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த மீன்களை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர். அதேபோல், எதற்கும் பயன்படாத இந்தவகை மீன்கள் அகற்றப்பட வேண்டும் என மீனவர்களும் கோரிக்கைவைத்தனர்.
தற்போது கோடை காலத்தில் ஏரியின் உள்ள தண்ணீர் முழுவதுமாக வறண்டுபோனதால், இங்கு வசித்துவந்த லட்சக்கணக்கான சக்கர் மவுத் மீன்கள் கரையோரங்களில் இறந்தநிலையில் மிதந்துகிடந்தன.
இதனால், மிகிழ்ச்சியடைந்த மீனவர்கள் இறந்துகிடக்கும் விஷ மீன்களை அகற்றுமாறு நகராட்சிக்கு கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.