சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' (Kallikattu Ithikasam) சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்நூலை கீதா சுப்ரமணியம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளி வந்திருக்கிறது.
இதனிடையே துபாயில் வரும் நவ.9-ல் அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ (The Saga of the Cactus Land) என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத்தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட இந்நூலானது, 2003-ல் ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றதோடு இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான ‘ஃபிக்கி’ விருதுக்குத் தேர்வு ஆகியிருந்தது.
இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’, ‘பத்மபூஷண்’ விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் ‘சாதனா சம்மான்’ விருதும் வைரமுத்து பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், கவிஞர் வைரமுத்து...
இதையும் படிங்க: மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் எழுதும் வீடியோ