சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அதேநேரம், மேல் தளத்தில் சில இளைஞர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.20) இரவு பயங்கர சத்தத்துடன் ஆட்டம் பாட்டம் நடைபெற்றுள்ளது. அதனால் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதிலும், சத்தம் அதிகாமனதால் மகாலெட்சுமி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சத்தம் போட வேண்டாம் என கேட்டுள்ளார். இதனையடுத்து, போதையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் மகாலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சத்தம் கேட்டு வந்த சுரேஷ்குமார், அவர்களை தட்டிக் கேட்கச் சென்றபோது, பத்து பேரும் சேர்ந்து சுரேஷ்குமாரைத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலில் காவல் உதவி ஆய்வாளரான குமரேசன் என்பவரும் சேர்ந்து சுரேஷ்குமார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதில் காயமடைந்த சுரேஷ்குமார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இது குறித்து சுரேஷ்குமாரின் தாயார் அன்னக்கிளி, சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலுக்கு, காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உத்தரவிட்டு உள்ளார்.
குண்டர் சட்டத்தின் கீழ் ஒரே வாரத்தில் 20 பேருக்கு கைது: கடந்த ஜனவரி முதல் தற்போது வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 459 பேர் திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 116 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 84 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேர் உள்பட மொத்தம் 687 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிளஸ்1 மாணவனுடன் காதல்; பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது! சென்னையைச் சேர்ந்த மாணவர் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகின்றார். இந்நிலையில். நேற்று முன்தினம் (டிச.20) நண்பர் வீட்டிற்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவர், இரவு வரை வீடு திரும்பாததால், மாணவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அம்மாணவரை எங்கு தேடியும் கிடைக்காததால், பெற்றோர் மகனை கண்டுபிடித்து தருமாறு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன மாணவரும், அவர் படித்துவரும் அதே பள்ளியில் 28 வயதான ஆங்கில ஆசிரியை உடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவர் மீது ஆசிரியருக்கு காதல் ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆசிரியையை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உள்ளது.
இந்நிலையில், அந்த ஆசிரியை சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, ஆசிரியரை பின்தொடர்ந்து மாணவரும் கோயம்புத்தூர் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாணவரின் செல்போன் எண்ணை வைத்து கோயம்புத்தூர் சென்ற போலீசார், இருவரையும் பிடித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஓசூர் இரட்டை கொலை வழக்கில் 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண்!