காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பின் இரண்டாம் நாளான இன்று, இருநாட்டு உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தை நடைபெறுவதையொட்டி தலைவர்களின் சந்திப்பிற்காக நேற்றே சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. இதனால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், இன்று கோவளம் பகுதியில் தலைவர்களின் சந்திப்பு நடைபெறவிருப்பதால், சென்னை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலவாக்கம் முதல் கோவளம்வரை பொதுப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலையான பழைய மகாபலிபுரம் சாலை (OMR) வழியாகச் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து அடையாறு வழியாகத் திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றன.
போக்குவரத்து தடை நேரம்:
காலை 7.30 முதல் பிற்பகல் 2 மணிவரை - ராஜிவ் காந்தி சாலையிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாகத் திருப்பிவிடப்படும்.
காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை - கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கிச் செல்ல அனுமதி இல்லை.
இதற்கிடையே சென்னை கஸ்தூரி பாய், இந்திரா நகர், திருவான்மியூர் ஆகிய நிலையங்களில் பறக்கும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.