சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரும் கடிதத்தையும் முதலமைச்சரிடம் அவர் வழங்கினார். அந்தக் கடிதத்தில் “தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1881ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் காந்தியின் பிறந்தநாளான கடந்த அக்டோபர் 2ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தின் சமூகநீதி சிறப்புகளில் முதன்மையான 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘69 சதவீத இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியாது. இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமானால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகையை சாதிவாரியாக கணக்கிட வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
நாடாளுமன்றத்தில் 2008ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய புள்ளிவிவர சேகரிப்புச் சட்டத்தின்படி (The Collection of Statistics Act, 2008) சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே அதன் பணியாளர்களைக் கொண்டு நடத்த முடியும். ஒரு மாத அவகாசத்தில் 300 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எளிதாக நடத்த முடியும். இன்றைய சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடைகள் இல்லை.
எனவே, தமிழ்நாட்டின் தேவையையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முன்னுரிமை!