இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'நாகப்பட்டினம் மாவட்டம் மாதானத்திலிருந்து நரிமனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக, உழவர்களின் எதிர்ப்பையும் மீறி, குறுவை நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் காவல் துறை உதவியுடன் குழாய்ப் பாதை அமைக்கும் பணிகளை கெயில் - ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. உழவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்காமல் அத்துமீறி வயலில் நுழைந்து, பயிர்களை அழித்து, குழாய்ப் பாதை அமைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
உழவர்கள் தங்களின் வயல்களை மிகவும் புனிதமாக கருதுபவர்கள். குறுவை பருவ நெற்பயிரை நடவு நட்டுவிட்டால் அவற்றை தங்களின் குழந்தைகளைப்போல அதிக பாசத்துடன் பராமரிப்பார்கள். அந்தப் பயிர்கள்தான் நாளைய நமது உணவை சுமந்து நிற்கும் கடவுளின் கருணைக் கருவிகளாகும்.
ஆனால், இத்தகைய உணர்வுகள் எதுவும் இல்லாமல் ஓ.என்.ஜி.சி., கெயில் நிறுவனங்களின் அலுவலர்கள் எந்திரமாக மாறி, உண்மையான எந்திரங்களின் உதவியுடன் பயிர்களை அழிப்பது மன்னிக்க முடியாததாகும். சில இடங்களில் உழவர்களின் கடுமையான போராட்டத்தினால் குழாய் பதிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, மற்ற இடங்களில் இந்த பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போது இந்த நிறுவனம் செய்துவரும் செயல் உழவை அழிக்கும் செயல் என்பது ஒருபுறமிருக்க, மிகப்பெரிய நம்பிக்கை துரோகமும் ஆகும். மாதானம் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டபோது உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் கூடுதலாக கிணறுகள் தோண்டப்படாது என்றும், கச்சா எண்ணெய் சரக்குந்து மூலமாக மட்டுமே கொண்டு செல்லப்படும்; அதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்படாது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வாக்குறுதியை நிறுவனங்கள் மறந்துவிட்டது.
கடந்த ஆண்டே இதற்கான முயற்சிகளில் ஓ.என்.ஜி.சி. - கெயில் நிறுவனங்கள் ஈடுபட்டபோது, அதை பாமக கடுமையாக எதிர்த்தது. இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்கள், இப்போது மீண்டும் தொடங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய்ப்பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.