இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசால் எந்தக் கொள்கை முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டு முறை, அலுவலர்களின் கூட்டணியால், பாரதிதாசன் பல்கலைக்கழகம் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட்டு, அதற்குள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு, 200 புள்ளி ரோஸ்டர் முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆள் தேர்வு அறிவிக்கையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஓர் அலகாக கருதப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தமிழ்நாடு அரசு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 22, 23, 24ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த ஆசிரியர் பணிகளுக்கான நேர்காணலை நிறுத்திவைத்தது. அதன்பின் எந்தக் கொள்கை மாற்ற முடிவும் அரசால் அறிவிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி முதல்நிலை தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டவர்களைக் கொண்டு நேர்காணல் நடத்தி, பேராசிரியர்களை நியமிக்கலாம் என பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தருக்கு மாநில உயர் கல்வித் துறை செயலர் மே 28ஆம் தேதி கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பொதுவாக பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீட்டு முறையில் ஏதேனும் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், அது குறித்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் உயர் கல்வி அமைச்சர் தலைமையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும்.
ஆனால், அந்த இரு நிலைகளிலும் அத்தகையதொரு முடிவு அறிவிக்கப்படாத நிலையில், பல்கலைக்கழக அலகு முறையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என்ற கொள்கை முடிவை தன்னிச்சையாக எடுக்க உயர் கல்வித் துறைச் செயலருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அமைச்சரவைக்கு உரிய அதிகாரத்தை உயர் கல்வித் துறைச் செயலர் தன்னிச்சையாகப் பறித்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கான ஆசிரியர்கள் நியமனத்தில் மேலும் பல குளறுபடிகள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சரும், உயர் கல்வித் துறை அமைச்சரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையை ரத்துசெய்துவிட்டு, ‘துறை அலகு’ இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் புதிய நியமன அறிவிக்கையை வெளியிடும்படி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு ஆணையிட வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் சமூக நீதியை உறுதிசெய்ய எத்தகைய போராட்டத்தை நடத்தவும் பாமக தயங்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.