ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னையை அடுத்த நங்கநல்லூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில், ராமதாஸ் பேசியதாவது:
அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம், இப்போது அழியும் நிலையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைசி முதலமைச்சராக கருணாநிதி இருந்துள்ளார். இனி அந்தக் கட்சியில் இருந்து யாரும் முதலமைச்சர் பதவிக்கு வரப்போவதில்லை.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார். அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது. அவரின் எதிர்க்கட்சி பதவியும் விரைவில் பறிக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெருநிறுவனம் போல் இயங்கிவருகின்றது. ஸ்டாலின் குடும்பத்தினர் அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்துவருகின்றனர். அதனால் கட்சித் தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர் டி.ஆர்.பாலு மிகப்பெரிய ஊழல்வாதி. அவரை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
கருணாநிதியின் ஊழலை விசாரிக்க ஒரு சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் டி.ஆர்.பாலுவின் ஊழல்களை விசாரிக்க ஒன்பது சர்க்காரியா ஆணையம் அமைத்தால்கூட போதாது. இலங்கையில் தமிழர்கள் கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, திமுகவினர் பதவிகளுக்காக டெல்லியில் முகாமிட்டிருந்தனர். இதனை ஒருபோதும் மக்கள் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.