சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரான ஜெயராமன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பாலு, '40 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக நிறுவனர் ராமதாஸ் மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 5ஆம் தேதி விசிகவை சேர்ந்த கவி கண்ணா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பாமக நிறுவனர் ராமதாஸ் மதுவை ஒழித்த லட்சணம்'' என்ற வாசகத்துடன் ராமதாஸின் இரண்டு புகைப்படங்களை இணைத்து, அவருக்கு அருகில் மதுபாட்டில் இருப்பது போன்ற வகையில் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த செய்தியின் உண்மை தன்மை அறியாமல் காங்கிரஸ் பிரமுகர் வாழப்பாடி ராமசுகந்தன் என்பவர் ''வித் நோ கமெண்ட்ஸ்'' எனக்கூறி அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இப்புகைப்படத்தில் அமைந்துள்ள பாட்டில் மதுபானம் இல்லை. ராமதாஸ் கால் வலிக்காக பயன்படுத்தப்படும் CoLavita ஆலிவ் ஆயில்' என அவர் கூறினார்.
மேலும், 'மதுவை ஒழிப்பதற்காக போராடி வரும் ராமதாஸின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில், உண்மைக்குப் புறம்பான செய்தியை பரப்பிய விசிக பிரமுகர் கவி கண்ணா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் ராமசுகந்தன் ஆகியோரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவர்கள் செய்தி வெளியிட்டதற்கான உள்நோக்கம் குறித்தும் விசாரணை நடத்தி அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும்' என அவர் கூறினார்.