வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயலானது நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க இருக்கிறது. கரையைக் கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நிவர் புயலையொட்டி எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது தேவையான உதவியும், ஒத்துழைப்பும் மத்திய அரசால் வழங்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியையும் அவர் தொடர்புகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.