சென்னை: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. முன்னதாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, அரசுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
அதில், ‘பிளாஸ்டிக் பாக்கெட்டில் பால் விற்பனை செய்யப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? பாலை முன்பைப் போல கண்ணாடி பாட்டிலில் ஏன் விற்பனை செய்யக் கூடாது?’ என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சாலைத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை செயலர் அருண் ராய் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த பதில் மனுவில், “பிளாஸ்டிக் பொருட்களினால் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியாக கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனிகள், வெளிமாநிலங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை அனுப்பி வைக்கிறது. எனவே, பிளாஸ்டிக் கம்பெனி மூலம் தமிழ்நாட்டிற்கும் வருமானம் கிடைக்கிறது. தற்போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பொதுவான வெற்று உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பிளாஸ்டிக் கம்பெனிகள், அதில் வேலை செய்யும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுவும், மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சில திருத்தத்துடன் இந்த அரசாணையை மாற்றி அமைக்க அனுமதி வேண்டும். தமிழ்நாட்டைப் போல, உணவுப் பொருட்களை பொட்டலம் கட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, வேறு எந்த மாநிலத்திலும் பிறப்பிக்கவில்லை. இந்த அரசாணையினால், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வந்து விடுகிறது.
இதனால், பிளாஸ்டிக் இல்லாத மாநிலம் என்ற இலக்கை அரசால் அடைய முடியவில்லை. எனவே, கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் தடை அரசாணையை மாற்றி அமைக்க அனுமதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடுகள் என்ன செய்வது என்பது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் பிற துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மது என்ன அத்தியாவசியப் பொருளா? - அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்