தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்ததும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்மைப் பாடப்பகுதிகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்றின் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் மாணவர்களுக்கு கல்வி தடையின்றி நடைபெறுவதற்கு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. மேலும் பல்வேறு சவால்களுக்கு இடையேயும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. பல்வேறு கற்றல் வளங்களைப் பயன்படுத்தி கற்பிப்பதின் மூலம் நடப்பு கல்வியாண்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட பாடப்பகுதிகளைத் தற்பொழுது உள்ள கற்றல் கற்பித்தல் நாட்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
மாணவர்கள் பாடங்களை ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்வதற்கு உளவியல் ரீதியாக வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும். தேர்வுகள் மற்றும் மதிப்பீடு எந்தவிதத்திலும் அழுத்தம் தருவதாக அமையக் கூடாது. பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் அரசுத் தேர்வுத்துறை நடத்தும் பொதுத் தேர்விற்கு ஏற்றவாறு அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் அந்தப் போட்டித் தேர்விற்கான பாடத்திட்டங்களை இதரப் பாடப்பகுதிகளிலும் இருந்தும் கற்க வேண்டியிருக்கும்.
பாடப்பொருளை வலுவூட்ட கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சித்தாள்கள் பயன்படுத்தப்படலாம். முதன்மைப் பாடப்பகுதிகளை தவிர இதரப் பாடப்பகுதிகளை மாணவர்களால் புரிந்துக் கொள்ள எளிதானது என கருதப்படும் இதர பாடப்பகுதிகளை கல்வித் தொலைக்காட்சி, ஒளிபரப்பு, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமும் கற்கலாம்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் பல்வேறு பாடங்களுக்கான வினாவங்கிகள் மற்றும் விடைப்புத்தகங்களை உருவாக்கி உள்ளது. இந்தப் புத்தகங்களை மாணவர்கள், இதர மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடப்பகுதிகளை கற்க பயன்படுத்தலாம். இதரப்பாடப்பகுதிகளில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு 15 நாட்களுக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படலாம். அரசு விடுமுறைகளை பயனுள்ளதாக மாணவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, மாணவர்களுக்கான ஆலாேசகர்கள் மூலமோ அல்லது ஆசிரியர்கள் மூலமாகவோ ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
வகுப்பறையில் கற்றல் நடைபெறும் போதே மதிப்பீடு நிகழலாம். மனப்பாடம் செய்து கற்கும் முறையைத் தவிர்க்கவும் புரிந்து கற்றலை ஊக்கப்படுத்தவும் மதிப்பீட்டுத் தாள்கள் அல்லது பயிற்சித்தாள்களை ஆசிரியர்களே தயாரித்து பயன்படுத்தலாம். மதிப்பீடு செய்யும் முறை மாணவர்கள் புரிந்துக் கொள்வதாக அமைய வேண்டும். மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளை தங்களின் வீடுகளிலேயே செய்ய ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும். பல்வேறு பாடங்களில் இடம் பெற்றுள்ள பாடக்கருத்துகளை இதற்கு தேர்வு செய்ய வேண்டும்.
மாணவர்கள் தேர்வுக்குறித்த அச்சத்தில் இருந்து வெளியே வருவதற்கு ஆசிரியர்கள் உதவிட வேண்டும். மாணவர்கள் கற்றல் நிலையை அறிந்துக் கொள்ளவும் மன அழுத்தம் ஏற்படாதவாறு திட்டமிட்டு மதிப்பீடுகள் நடத்தப்பட வேண்டும். வகுப்பறையில் நடத்தப்பட்ட பாடப்பகுதிகளில் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு