சென்னை: சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் இறுதியில் அமைச்சர் ராமச்சந்திரன் பதிலுரை வழங்கினார்.
அதில், "தமிழ்நாட்டில் கோவை, தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் அதிக வனம் கொண்ட பகுதிகளை உள்ளடக்கியது. வனத்தைப் பாதுகாக்கத் தவறியதால் நேற்று குழாயில் தண்ணீர் குடித்தோம். இன்று பாட்டிலில் நீர் குடிக்கிறோம். நாளை முதுகில் ஆக்ஸிஜனை சுமந்து அதை மட்டுமே அருந்தும் நிலை உருவாகும்.
33% வனமாக மாற்றிட நடவடிக்கை
ஆகவே வனத்தை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் 33 விழுக்காடு செழுமை மிக்க வனமாக மாற்றிட நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாட்டில் 15 வனவிலங்குகள் சரணாலயம், 15 பறவைகள் சரணாலயம், ஐந்து தேசிய பூங்காக்கள், ஐந்து புலிகள் சரணாலயம், நான்கு யானைகள் காப்பகம் ஆகியவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, திறன் மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுத்தீயால் வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு கோபுரம், ட்ரோன் கொண்டு கண்காணிப்பு ஆகியவை செயல்படுத்தப்படும்.
வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை, பசுமை தமிழகம் திட்டம் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஈரநில பாதுகாப்பு மற்றும் ஈரநில உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஐந்து ஆண்டுகளில் 150 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
வன உயிரின பாதுகாப்பிற்காக 81.6 கோடி ரூபாய் செலவிடப்படும். வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலைத் தோட்ட வேலைவாய்ப்பு திட்டத்தில் தற்போது 1500 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை!