சென்னை : தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வாழும் ஏழைக் குடும்பங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரத்து 410 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 12 ஆயிரத்து 752 அடுக்குமாடி குடியிருப்புகள், 9 ஆயிரத்து 48 தனி வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரத்து 396 அடுக்குமாடிக் குடியிருப்புகள் 562 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் 2 ஆயிரத்து 876 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு முன்னேற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்து 692 தனி வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு அவற்றுள் 569 வீடுகள் முடிவைந்திருப்பதாகவும் மீதமுள்ள ஆயிரத்து 123 வீடுகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் இருப்பதாகவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,இன்று (செப்.1) சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று முதல் குடிசைப் மாற்று வாரியம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என அறிவித்திருந்தார்.