சென்னை: நாயகராக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக, தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், அடுத்து இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.
2 எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் "பிக்கப்" படத்தில் தான், அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார். பிரபல இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பாடுவதற்குத் தயாராக உள்ளனர்.
பவருடன் வனிதா
நடிகை வனிதா விஜய்குமார் பிக்பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
அதனைத்தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதா விஜயகுமார், தற்போது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக 'பிக்கப்' படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்ச்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது.

பேய் பங்களாவில் வாழ்க்கை
பவர் ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தப் பங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்து, அதிலிருந்து அவரும் பவர் ஸ்டாரும் எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்லியிருப்பதே, இப்படத்தில் கதைச்சுருக்கம்.
இப்படம் குறித்து பவர் ஸ்டார் சீனிவாசன் கூறும்போது, 'இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரையுலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன்.
இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு "வைரல் ஸ்டார்" என்ற பட்டத்தோடு பெயரைப் போடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.