சென்னை, முதுகலை கணினி ஆசிரியர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. விதிமீறல் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 119 தேர்வு மையங்களில் நடைபெற்றது. அவற்றில் மூன்று தேர்வு மையங்களில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வுகள் நிறுத்தப்பட்டன' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேர்வுகள் நிறுத்திய பின்னர், தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்று தங்களது மொபைல் போனில் தேர்வு குளறுபடி நடந்தது போல் காணொலி எடுத்து அனுப்பி உள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து, தேர்வு நிறுத்தப்பட்ட மூன்று தேர்வு மையங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இணையவழித் தேர்வினை நடத்திய நிறுவனம் ஏற்கனவே அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு, ரயில்வே தேர்வு உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளது. தேர்வர்கள் எழுதிய தேர்வுக்கான விடைகள் அவர்களின் லாக்கினில் சேமிக்கப்படும். எனவே தேர்வு நிற்க எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மழையின் மூலம் நடைபெறும் தேர்வினை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.