சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நகரங்களிலும் மத்திய அரசு வரி மற்றும் அந்த மாநிலத்தின் உள்ளூர் வரி ஆகியவற்றை சேர்த்து வெவ்வேறு விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்றைய தினம் பெட்ரோல் விலை 89 ரூபாய் 70 காசாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சில்லறையாக பெட்ரோல் போடும் தனிநபர்களுக்கு லிட்டருக்கு 90 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ள பொதுமக்கள், தற்போது பெட்ரோல் விலை உயர்வால் மேலும் சுமை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.