தமிழ்நாடு முழுவதும் ஆறாவது கட்டமாக கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பால் கடைகள், மருந்தகம் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (ஜூலை12) முழு ஊரடங்கை மீறி சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையம் (பங்க்) செயல்பட்டு வந்தது.
அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சங்கர் நகர் காவல் துறையினர் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருவதை பார்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து பல்லாவரம் வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் பெட்ரோல் பங்குக்கு விரைந்து வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பெட்ரோல் பங்கை மூடி சீல் வைத்தனர்.
பின்னர் முழு ஊரடங்கை மீறி தனியார் நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: வீடியோ: மாநில எல்லையில் புலிகளுக்கு இடையே நடந்த சண்டை!