கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுவருகின்றனர். பல்வேறு சிறு, குறு தொழில் துறையினரும் ஊரடங்கால் வேலை, வருமானமற்று நலிவுற்றிருக்கும் நிலையில், விவசாயிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, ”கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கில் ஒரு பங்கு விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கக்கூட நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆழ்துளைக் கிணறுகள், பால் பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வழக்குரைஞர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
இந்த வழக்கை காணொலி வாயிலாக விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, எந்த ஒரு ஆய்வும் செய்யாமல், எந்த ஆதாரங்களும் இல்லாமல் கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தள்ளுபடி செய்தனர்.
மேலும், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத் தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்குச் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள், செவிலியருக்கு முழு பாதுகாப்பு உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு