சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
ஆனால், இந்த புதிய பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், “பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கட்சி விதிகளின்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.
கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் தடை விதிக்க வேண்டும். செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும்” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த பிரச்னை தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10% ஒதுக்கீடு - உள்துறை அமைச்சர் அமித் ஷா