கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள அதே வேளையில், நிவாரணப் பணிகளுக்கும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சமாளிக்கும் வகையில் அரசுப் பணியாளர்களின் ஈட்டு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை ஓராண்டுக்கு ரத்து செய்துள்ளது. அதேசமயம், அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 58இல் இருந்து 59ஆக அதிகரித்துள்ளது.
அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் பலரின் கனவு கேள்விக்குறியாகும் என்பதால், அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா வெற்றி கொண்டான் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ”அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயது 35ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஓய்வுபெறும் பணியாளர்களின் வயதை அதிகரித்துள்ளதால், 34 வயதைக் கடந்தோர் பாதிக்கப்படுவர். இதனால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்படும். அவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கும் வகையில், தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல எனவும், அரசுப் பணிகள் தொடர்பான விவகாரங்களில் பொதுநலவழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஊழியர்களின் ஓய்வு வயது 59 விவகாரம் - தமிழ்நாடு அரசு விளக்கம்