சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் துறையினர் மீது லஞ்ச புகார் எழுந்துள்ளது. ‘நேர்மையான காவலர்கள்’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் புகார் மனு ஒன்று பரவிவருகிறது. அதில், “சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்கள் ஆகியோர் மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டு, லஞ்சம் கொடுக்கும் காவலர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில் ரோந்து பணி வழங்குகின்றனர்” என அந்த புகார் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் துணை ஆணையர்கள், ரோந்து பணியிலுள்ள காவலர்களை காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அழைக்கும்போது, அவர்களை உஷார்படுத்தவும், வேலை செய்யாமல் இருக்கும் ரோந்து காவலர்களை தப்பிக்க வைக்கவும் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் உதவியுள்ளனர். இதற்கு கட்டுப்பாட்டு அறை காவலர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த லஞ்ச புகாரிலுள்ள பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநகர ஆணையர், கூடுதல் ஆணையர் (தலைமையிடம்), கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு), காவல் கட்டுப்பாட்டு அறை கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு இந்த புகார் மனு அனுப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் உத்தரவில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இரவு ரோந்து பணியில் ஈடுபடும் ஆய்வாளர்கள் பட்டியலை, சென்னை காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது 35 இடங்களில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் புகார்!