கரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவைத் திரும்பப்பெறக் கோரி விருதுநகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ”மற்ற வைரசுகளைப் போல கரோனா வைரஸ் நீர், காற்று மூலம் ஏற்படக்கூடிய சாதாரண வைரஸ் என லண்டன் வைரஸ் ஆராய்ச்சிக் குழு கூறியிருக்கிறது. இதை மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவக் காப்பீடு மூலம் கரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்திருப்பதால், வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து பொருளாதாரத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். கரோனா தொற்றைக் குணப்படுத்த ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதைப் பற்றியெல்லாம் ஆராய நீதிமன்றத்துற்கு எந்த நிபுணத்துவம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 58 நாட்கள் ஊரடங்கு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விவரம் வெளியீடு!