சென்னை: கே.கே.நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன்நாத் (51), ஐடி கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தீவிர சாய்பாபா பக்தர். கடந்த பிப்ரவரி மாதம் கான்பிரன்சில் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பாண்டிச்சேரியை சேர்ந்த சபரிநாதன் என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது தான் சபரிநாதன் உடன் மோகன் நாத்திற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் சாய் பாபா குறித்து சபரிநாதன் உடன் தொடர்ந்து பேசிவர இருவரும் நண்பர்களாகி உள்ளனர். அப்போது சபரிநாதன் தனக்கு செய்வினைகள் எடுப்பது போன்ற வேலைகள் தெரியும் என கூறி மோகன்நாத்தை நம்ப வைத்துள்ளார்.
பின்னர் மோகன்நாத்திடம் நெருங்கி பழகிய சபரி நாதன் நசுக்காக பேச்சுக் கொடுத்து அவரின் குடும்ப விஷயங்களையும் கேட்டு அறிந்துள்ளார். பின்னர் மோகன்நாத்தின் இரண்டு சகோதரர்களும் இணைந்து மோகன்நாத்திற்கு சூனியம் வைத்திருப்பதால் தான் அவருக்கு நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் பல தடைப்பட்டு வருவதாகவும், இதனால் பரிகாரம் செய்ய வேண்டும் என மோகன்நாத்தை சபரிநாதன் மூளைச்சலவை செய்துள்ளார்.
மேலும் மோகன்நாத்திடம் இருந்து 3 தவணையாக ரூ.2.5 லட்சம் பெற்றுள்ளார்.இந்த நிலையில் கடந்த மே மாதம் செய்வினையை நீக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனவும், சீரடிக்கு நேரடியாக சென்று நகையை வைத்து சூனியத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்து, மோகன்நாத்திடம் இருந்து 15 சவரன் நகைகளை சபரிநாதன் பெற்று கொண்டு சென்றுள்ளார்.
பல நாட்களாகியும் சபரிநாதன் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மோகன்நாத், சபரிநாதனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்நாத் மே மாதம் 12ஆம் தேதி கே.கே.நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த சபரிநாதனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சபரிநாதனின் செல்போன் எண்ணை டிராக் செய்து சூளைமேட்டில் பதுங்கி இருந்தபோது நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மோகன்நாத்தின் அண்ணன் கோபியின் மனைவி சிவகாமி என்பவர் மாசாணி அம்மன் கோவிலில் வைத்து சபரிநாதனை சந்தித்து உள்ளார். அப்போது மோகன்நாத்தின் குடும்பத்திற்கும், சிவகாமி குடும்பத்திற்கும் பிரச்சனை அடிக்கடி ஏற்படுவதாகவும், இதனால் மோகன்நாத்தின் குடும்பத்தில் சூனியம் வைக்குமாறு சிவகாமி சபரிநாதனிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன் நாத் சாய்பாபாவின் பக்தர் எனவும் பணம் அதிகமாக இருப்பதாகவும் சபரி நாதனிடம் சிவகாமி தெரிவித்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். சபரிநாதனை பற்றி விசாரணை நடத்தியதில், அவர் முன்னதாக பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இவருடன் இருக்கும் ரமா என்ற பெண்ணை தாய் என்றும் அக்கா என்றும் பல்வேறு உறவுகளை கூறி மோசடி செய்யப் போகும் நபர்களிடம் அறிமுகப்படுத்தி குடும்பம் போல் பழகியது தெரியவந்துள்ளது.
சதுரங்கவேட்டை பட பாணியில் தொடர் மோசடி: பாண்டிச்சேரியில் கிருஷ்ணன் என்பவரிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி எனக் கூறி ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக மோசடி செய்துள்ளார். சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தைச் சேர்த்து வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்டினால் பிற்காலத்தில் அந்த வீட்டு வசதி வாரிய கடன் தள்ளுபடி ஆகிவிடும் எனக் கூறி நம்ப வைத்து பணத்தை மோசடி செய்துள்ளார்.
மேலும் மோசடி செய்த பணத்தை வைத்து திருவான்மியூரில் சொகுசு பங்களா கட்டியதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாண்டிச்சேரி சிபிசிஐடி போலீசார் சபரிநாதனையும் அவரது தாய் எனக் கூறிக்கொண்ட ரமாவையும் கைது செய்தனர். இதேபோல் ரமா ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகக் கூறி நில மோசடியில் ஈடுபட்ட விவகாரத்திலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரமா மற்றும் சபரிநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
படிப்பை மூலதனமாக்கி மோசடி: ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளிவந்த சபரிநாதன் அடுத்தடுத்து அவதாரங்கள் எடுத்து பல்வேறு விதமான முறையில் மோசடிகளை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாகத் தான் டபுள் சைக்காலஜி பட்டப்படிப்பு படித்ததாகவும் வறுமையின் காரணமாக மோசடி செய்து குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்கவில்லை என்பதற்காகப் படித்த படிப்பை வைத்தே மனிதர்களை எவ்வாறு ஏமாற்றுவது என மோசடியில் இறங்கியதாகவும், பல பேரிடம் அப்பாவி போல் நண்பராக பழகி நம்பிக்கையைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதேபோன்று தான் சிபிசிஐடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த சபரிநாதன் கே.கே.நகரில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. சதுரங்க வேட்டை படத்தில் உள்ள கதாநாயகன் போல் அரசு அதிகாரி, சீரடி சாய்பாபா பக்தர், ரியல் எஸ்டேட் புரோக்கர் என பல்வேறு அவதாரம் எடுத்து பல வகையில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பத்து நிமிடம் பேசினால் மனிதர்களை ஈசியாக நம்ப வைத்து ஏமாற்றி விடலாம் என்ற தான் படித்த படிப்பை வைத்து மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபோன்று பெரிய மோசடிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக 20 ஆயிரம், 30 ஆயிரம் என பணம் வாங்கிக் கொண்டு பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சபரி நாத்திடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 9 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடி செய்த சில நகைகளை பாண்டிச்சேரியில் சபரி நாதன் விற்று இருப்பது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பேராயரை துரத்திச் சென்று தாக்கிய திமுக எம்.பி ஆதரவாளர்கள்.. நடந்தது என்ன?