சென்னை: புரசைவாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார்(47) என்பவர் சவுகார்பேட்டையில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை ஜெயக்குமார் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து கெல்லிஸ் பகுதிக்கு தனது காரில் சென்று உள்ளார். அப்போது தனது காரை கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த பழனி என்பவர் மீது மோதி அவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயக்குமாரின் கார் அதோடு நிற்காமல் சாலையில் நின்று கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மீது மோதியதால் வாகனங்கள் அனைத்தும் சேதமடைந்தன. மேலும் பலத்த காயமடைந்த நபர் ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பயங்கர விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயக்குமார் மது போதையில் கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்தினாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், கார் ஓட்டிய போது கவனக் குறைவால் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை (accelerator) அழுத்தியதால் கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஜெயக்குமார் தாறுமாறாக காரை ஓட்டி பழனி மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர்கள் கடத்தல் முயற்சி! வசமாக சிக்கிக் கொண்ட கடத்தல் குருவி!