சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வங்கியில் கார் லோன் பெறுவதற்காகப் போலி ஆவணங்கள் தயார் செய்து சமர்ப்பித்து ரூ.60 லட்சம் பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக கொடுங்கையூரைச் சேர்ந்த சதிஷ்குமார் (40) என்பவரை, மத்திய குற்றப்பிரிவு வங்கி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இதையடுத்து சதிஷ்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்தார்.
இதன் பேரில், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், சதிஷ்குமார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.