சென்னை: காவிரி டெல்டாவில் எட்டு எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"காவிரி பாசன மாவட்டங்களில் 24 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2013ஆம் ஆண்டில் அனுமதி அளித்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தத் திட்டங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், அவை காலாவதியானதாகவே கருதப்பட வேண்டும்.
இதுவரை அமைக்கப்படாத எட்டு எண்ணெய்க் கிணறுகளை அமைக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரினால், அவை புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகளின்படி, புதிய தொழிற்திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என்பதால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக, ஓஎன்ஜிசி எட்டு கிணறுகளை அமைக்க அனுமதி அளித்திருப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யப்படும் கேடாகும். இது சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதையே சிதைக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தும் எந்த திட்டங்களுக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை. இது மிகப்பெரிய விதிமீறல். அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வெகுமதி அளிப்பது போன்று, எட்டு எண்ணெய்க் கிணறுகளை அமைக்க அனுமதி அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
புதிதாக செயல்படுத்தப்படவுள்ள இந்தத் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம், காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும். இதைத் தடுக்க வேண்டும். எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் எட்டு எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து அளிக்கப்பட்ட ஆணையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.