சென்னை: போதைப்பொருட்களின் பயன்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 3) ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி அளிக்கக்கோரி தமிழ்நாடு டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி அளிக்காததால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, ’மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக்கோரி, ஒட்டுமொத்தமாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனுமதி அளிக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையிடம் விண்ணப்பித்தால் மனுக்கள் பரிசீலிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.கபிலன் ஆஜராகி, நவம்பர் 18ஆம் தேதியே மனு அளித்தும் பரிசீலித்து முடிவெடுக்கவில்லை என்றும்; தற்போது மாவட்ட வாரியாகவும் மனுக்கள் அளிக்கபட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, மாவட்ட வாரியாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்